அக்னி வீரர்களை வரவேற்கிறோம் - ஆனந்த் மஹிந்திராவை தொடர்ந்து ஹர்ஷ் கோயங்கா அறிவிப்பு
தொழிலதிபர்களின் அடுத்தடுத்த அறிவிப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது.
புதுடெல்லி,
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அக்னிபத் திட்டத்தை வரவேற்று மஹிந்திரா குழுமம் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களை மஹிந்திரா குழுமம், பணி அமர்த்துவதற்கான வாய்ப்பை வழங்க விரும்புவதாகவும், இப்போது நடைபெறும் வன்முறையால் வருத்தமடைந்துள்ளதாகவும்" பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவரை தொடர்ந்து ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா அக்னி வீரர்களை வரவேற்பதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து ஆனந்த் மஹிந்திராவின் பதிவை குறிப்பிட்டு ஹர்ஷ் கோயங்கா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " ஆர்பிஜி குழுவும் அக்னிவீரர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்பை வரவேற்கிறது. மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து இந்த உறுதிமொழியை எடுத்து நமது இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தொழிலதிபர்களின் இந்த அடுத்தடுத்த அறிவிப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது.