இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு: சிக்கி தவித்த 28 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக மீட்பு; வீடியோ வெளியீடு
இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு இடையே, சிக்கி தவித்த 28 மலையேற்ற வீரர்களை தேசிய பேரிடர் மீட்பு படை மீட்டு உள்ளது.
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ள நீரில் சிக்கி தவித்து வருகின்றனர். கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால், பல இடங்களில் வாகனங்கள் நடுவழியில் சிக்கி தவித்தன. ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகளும் பரிதவித்து வந்தனர். அவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையின் ஆய்வாளர் பிரேம் குமார் நேகி கூறும்போது, கூட்டு மீட்பு படையினர் துணிச்சலாக செயல்பட்டு 28 மலையேற்ற வீரர்களை நேற்று மீட்டனர்.
கிண்ணாரின் கரா பகுதியில் சிக்கி தவித்த அவர்களை ஒருவர் பின் ஒருவராக, கயிறு கட்டி மீட்டனர். இந்த பணியில், அவர்களுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டனர்.
கனமழை பெய்தபோதும், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி பயணம் தடைப்பட்டபோதும், உள்ளூர் பள்ளியில் இரவு முழுவதும் தங்கியிருந்து, பின்னர் அடுத்த நாள் காலை மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு கயிறுகள் உள்ளிட்ட பொருட்களுடன் சென்று அவர்களை மீட்டு உள்ளனர்.
இதேபோன்று, நீர்மட்டம் அதிகரித்ததில், கப்னு கிராமத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சிக்கி தவித்த 11 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.