சாப்ட்வேர் தரம் உயர்த்தப்பட்டதால் போலீஸ் நிலையங்களில், முதல் தகவல் அறிக்கைகள் பெறுவதில் சிக்கல்
சாப்ட்வேர் தரம் உயர்த்தப்பட்டதால் போலீஸ் நிலையங்களில், முதல் தகவல் அறிக்கைகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு:
குற்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்த ஆவணங்களை வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. சமூக ஆர்வலர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ஆவணங்களின் நகல்கள் பெற விரும்புபவர்களுக்கு இது வசதியாக உள்ளது. தலைநகர் பெங்களூருவிலும் இதேபோல் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூரு போலீசார் சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவேற்றும் சாப்ட்வேர் தரம் உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக பலரும் குற்ற சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இதுகுறித்து பலரும் போலீஸ் நிலையங்களை தொடர்பு கொண்டு புகார் அளித்து வருகின்றனர். இதுகுறித்து கணினி பிரிவு உயர் போலீஸ் அதிகாரி சவுமேந்து முகர்ஜி என்பவர் கூறுகையில், சாப்ட்வேர் தரம் உயர்த்தும் பணி நடைபெற்றது. இதனால் தொழில்நுட்ப பணிகள் சற்று மந்தமடைந்துள்ளது. அவற்றை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் குற்ற வழக்கு ஆவணங்களை பெற்று கொள்ளலாம் என்றார்.