வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 11 Feb 2024 4:45 AM IST (Updated: 11 Feb 2024 5:23 AM IST)
t-max-icont-min-icon

மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேர்த்தலா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பெரும்பாவூர்,

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் குஞ்சுமோன். இவருடைய மனைவி நஜ்மா. இவர்களது மகள் தஸ்னி (வயது 22). இவருக்கும், தண்ணீர் முக்கம் பகுதியை சேர்ந்தவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் வரதட்சணை கேட்டு தஸ்னியை மாமியார் ஆயிஷா (59) கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் தஸ்னி மனமுடைந்து காணப்பட்டார். இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது கணவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக தஸ்னியின் பெற்றோர் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முகம்மா போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ஆயிஷா தனது மருமகள் தஸ்னியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து ஆயிஷாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேர்த்தலா கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. போலீசார் விசாரணை நடத்தி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஆயிஷாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பவினநாத் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். பின்னர் ஆயிஷாவை போலீசார் மாவேலிக்கரா சிறையில் அடைத்தனர்.


Next Story