காஷ்மீரின் முதல் மின்சார ரெயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு பரூக் அப்துல்லா பாராட்டு


காஷ்மீரின் முதல் மின்சார ரெயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு பரூக் அப்துல்லா பாராட்டு
x
தினத்தந்தி 20 Feb 2024 2:56 PM IST (Updated: 20 Feb 2024 3:12 PM IST)
t-max-icont-min-icon

மின்சார ரெயிலின் இயக்கத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்முவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள ரம்பன் மாவட்டத்தில் பாரமுல்லா-ஸ்ரீநகர்-பனிஹால்-சங்கல்தான் வழித்தடத்திற்கான முதல் மின்சார ரெயிலை இன்று ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் ரெயில் நிலையத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் காஷ்மீரின் முதல் மின்சார ரெயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு, தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"காஷ்மீருக்கு மின்சார ரெயிலை கொண்டு வர அயராது உழைத்த ரெயில்வே ஊழியர்களை வாழ்த்துகிறேன். இது காஷ்மீர் மக்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறேன். இப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டதே மிகப் பெரிய சாதனை. இதற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் ரெயில்வே அமைச்சகத்துக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீரில் ரெயில்களின் இணைப்பு சுற்றுலாவை மேம்படுத்தும். அதோடு நாட்டின் பிற பகுதிகளுக்கும் காஷ்மீர் மக்கள் எளிதாக பயணிக்க முடியும். காஷ்மீரில் இருந்து பொருட்களை மற்ற பகுதிகளுக்கு அனுப்பலாம். அதேபோல், நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் எந்த தடையும் இல்லாமல் பொருட்களை இங்கு கொண்டு வர முடியும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைக்கும் ரெயில் சேவையை கொண்டு வருவதில் பல சிரமங்கள் இருந்தன. கடினமான நிலப்பரப்பு காரணமாக சுரங்கப்பாதைகளை அமைக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த சிரமங்களை ரெயில்வே நிர்வாகம் வெற்றிகரமாக கடந்துள்ளது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இந்த ரெயில் முழுமையாக இணைக்கப்படும் என்று நம்புகிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story