டெல்லி நோக்கி பேரணி: 6 மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் தயாராக வரும் விவசாயிகள்


டெல்லி நோக்கி பேரணி:  6 மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் தயாராக வரும் விவசாயிகள்
x
தினத்தந்தி 13 Feb 2024 11:56 AM IST (Updated: 13 Feb 2024 6:56 PM IST)
t-max-icont-min-icon

பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது.


Live Updates

  • 13 Feb 2024 6:00 PM IST

    விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முடியாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சிலர் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். சிலர் பஞ்சாப்-அரியானா எல்லையின் ஷம்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து. போலீசாரின் பேரிகார்டை கீழே வீசினர். மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பலகைகளையும் உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

  • 13 Feb 2024 1:32 PM IST

    கடந்த முறை நடந்த போராட்டத்தைப் போலவே இந்த முறையும் நீண்டகால போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக வருகின்றனர். டெல்லிக்குள் செல்ல முடியாதபடி எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. எனவே, எல்லைப்பகுதியிலேயே முகாமிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், டிராலிகளில் தேவையான அளவுக்கு டீசலுடன் டெல்லி நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 

  • 13 Feb 2024 12:41 PM IST

    டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

    மத்திய அரசைக் கண்டித்து டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பஞ்சாப்- அரியானா ஷம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசி அவர்களை போலீசார் கலைத்து வருகின்றனர். இதனிடையே விவசாயிகள் பேரணி காரணமாக, டெல்லி-காசிப்பூர் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  • 13 Feb 2024 12:38 PM IST

    புதுடெல்லி,

    கடந்த 2020-ம் ஆண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேல் நீடித்த போராட்டத்தின் இறுதியில், வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று, சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இன்று டெல்லி நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தன.

    இந்நிலையில் பஞ்சாபில் இருந்து விவசாயிகள் 'டெல்லி சலோ' அணிவகுப்பை தற்போது தொடங்கி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கி உள்ளது. முக்கிய இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதால், விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக வருவதில் சிரமம் ஏற்படும் என்று தெரிகிறது.

    இந்த சூழலில் அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் விவசாயிகள் மட்டும் 10 ஆயிரம் டிராக்டர்களில் கிளம்பி உள்ளனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சாலை மார்க்கமாக டெல்லி வர சுமார் 5 மணி நேரமாகும் என்பதால் தடுப்புகளை குவித்து போலீசார் தயார் நிலையில் உள்ளனர். விவசாயிகள் டெல்லி வருவதை தடுக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி டெல்லி எல்லை பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகியவற்றில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் வாகனங்களை பஞ்சர் ஆக்கும்வகையில், சாலையில் ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்கிரீட் தடுப்புகள், கூர்மையான ஒயர்கள், முள்கம்பிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. கன்டெய்னர்களை கொண்டுவர கிரேன்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    எல்லை பகுதிகளில் 5 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி-ரோதக் சாலையில் துணை ராணுவப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிங்கு எல்லையில் முழு நேரமும் கண்காணிக்க தற்காலிக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

    டிரோன்கள் மூலமும் விவசாயிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். அரியானாவை ஒட்டியுள்ள கிராமப்புற சாலைகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

    இதுபோல், அரியானா மாநில பா.ஜனதா அரசும் விவசாயிகள் பேரணியை முறியடிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன்படி விவசாயிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட விவசாயிகளை அடைப்பதற்காக, 2 விளையாட்டு மைதானங்களை தற்காலிக சிறைகளாக மாற்றி உள்ளது. அம்பாலாவை ஒட்டிய ஷாம்பு எல்லையில் அரியானா மாநில அரசு தடுப்புகளை அமைத்துள்ளது. சிமெண்ட் சுவர்களை கட்டி வைத்துள்ளது.

    காக்கர் ஆறு வழியாக விவசாயிகள் டிராக்டரில் செல்வதை தடுக்க ஆற்றுப்படுகையில் போலீசார் பள்ளங்களை தோண்டி போட்டுள்ளனர். கண்காணிப்பு பணிக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்நிலையில் விவசாயிகள் பேரணியை மேற்கோள்காட்டி பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விவசாயிகளை கைது செய்வது தவறானது என்று டெல்லி உள்துறை மந்திரி கைலாஷ் கெலாட் மத்திய அரசுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் கோரிக்கை உண்மையானது. இரண்டாவதாக, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசன உரிமை. எனவே விவசாயிகளை கைது செய்வது தவறானது. மத்திய அரசு, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். நாட்டு விவசாயிகள் நமது "அன்னதாதா", அவர்களைக் கைது செய்வதன் மூலம் இப்படி நடத்துவது அவர்களின் காயத்தில் உப்பைத் தடவுவது போலாகும். மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாங்கள் ஒரு சாட்சியாக இருக்க முடியாது. எனவே, ஒரு மைதானத்தை சிறைச்சாலையாக மாற்ற ஒப்புதல் அளிக்க முடியாது" என்று அதில் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.


Next Story