அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்; மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் கோரிக்கை


அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்;  மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2024 6:30 PM IST (Updated: 18 Feb 2024 5:23 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு விரும்பினால் ஒருநாள் இரவில் அவசர சட்டத்தை கொண்டு வர முடியும் என்று விவசாய சங்க தலைவர் சர்வன் சிங் பந்தர் கூறினார்.

சண்டிகார்,

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி நோக்கி செல்வோம் என்ற போராட்டத்தை தொடங்கியிருக்கும் விவசாயிகள் தற்போது பஞ்சாப்- ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் 5-வது நாளாக இன்று நீடித்து வருகிறது. விவசாயிகள் - மத்திய அரசு இடையே நாளை மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விவசாய சங்க தலைவர் சர்வன் சிங் பந்தர் தெரிவித்துள்ளார். ஷம்பு எல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பந்தர் கூறியதாவது:- மத்திய அரசு விரும்பினால் ஒருநாள் இரவில் அவசர சட்டம் கொண்டு வர முடியும். விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண மத்திய அரசு விரும்பினால், அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதன்பிறகு ஆலோசனைகளை மேலும் தொடரலாம்" என்றார்.


Next Story