பெங்களூருவில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


பெங்களூருவில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு:

அசாமை சேர்ந்தவர் யாசர். பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் வசித்து வரும் இவர் மீது ஏராளமான வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் அவரது பெயர் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் யாசரை சேஷாத்திரிபுரம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், பெங்களூரு பேலஸ் ரோடு பகுதியில் யாசர் பதுங்கி இருப்பதாக சேஷாத்திரிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் நேற்று அதிகாலையில் பேலஸ் ரோடு பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த யாசர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

இதையடுத்து போலீசார், யாசரை மடக்கி பிடித்து கைது செய்ய முயன்றனர். அப்போது யாசர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை தாக்க முயன்றார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார், தான் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து வானத்தை நோக்கி சுட்டு சரணயடையும்படி எச்சரிக்கை விடுத்தார். எனினும் அதை பொருட்படுத்தாமல், யாசர் தான் வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார், யாசரை நோக்கி துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டார். இதில் ஒரு குண்டு யாசரின் வலது காலில் பாய்ந்தது. இதனால் அவர் அதேப்பகுதியில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் குண்டுக்காயம் அடைந்த யாசர் மற்றும் யாசர் தாக்கியதில் காயம் அடைந்த போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அசாமை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 6 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது என கூறப்பட்டது.

பெங்களூருவில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story