காங்கிரசில் சசி தரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள்: அசாம் முதல்-மந்திரி
சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடத்தப்பட்டு, அக்டோபர் 19-ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தத் தேர்தலில் தேர்தலில் தரூர் 1072 வாக்குகளும், கார்கே 7,897 வாக்குகளும் பெற்றனர்.சசி தரூரை மல்லிகார்ஜுன கார்கே அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இது குறித்து அசாம் முதல்-மந்திரியும், பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று பேசியதாவது, "காங்கிரஸின் உட்கட்சித் தேர்தல்கள் எனப்படும் தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தெரிந்து அறிவிக்கப்பட்டுவிட்டது. காங்கிரஸில் உள்ள சுமார் 1,000 பிரதிநிதிகள் மட்டுமே சசி தரூருக்கு ஜனநாயக முறையில் வாக்களிக்க தைரியம் காட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
அதே நேரத்தில், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரும் சர்மாவின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், "போராடும் துணிச்சல் உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) ஒருபோதும் சேர மாட்டார்கள். போராடும் தைரியம் இல்லாதவர்கள் தான் பேராசைக்கு கீழ் வருவார்கள்" என்று கூறினார்.