தேர்தல் களத்தில் கடினமாக செயல்பட வேண்டும் - தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவுறுத்தல்
வேட்பாளர்கள் உட்பட அனைவரும் எளிதில் அணுகும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டத்தை மாநில வாரியாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான குழு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார். இதில் இந்த ஆய்வு கூட்டத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேசியதாவது:-
தேர்தல் பார்வையாளர்கள் களத்தில் கடினமாகவும், அதேசமயம் பணிவாகவும் செயல்பட வேண்டும். சுதந்திரமான, நேர்மையான, இலவசங்களால் தூண்டப்படாத அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். வேட்பாளர்கள் உட்பட அனைவரும் எளிதில் அணுகும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள் இருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று அதிக அளவிலான வாக்குப்பதிவு மையங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நேரில் செல்ல வேண்டும். களசூழலை ஆய்வு செய்வதுடன் சுதந்திரமாக, நேர்மையாக தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பதட்டமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காண வேண்டும்.
வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்,பெண்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வாக்குச்சாவடி மையங்களுக்கு அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். தேர்தல் பார்வையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படியும் எந்த விதமான முக்கிய நிகழ்வுகளை ஏற்பட்டாலும் அதனை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.