ஓட்டல்கள் பெயரில் போலி ஆவணங்ளை கொடுத்து ஸ்வைப்பிங் எந்திரங்கள் வாங்கி மோசடி செய்த என்ஜினீயர் கைது


ஓட்டல்கள் பெயரில் போலி ஆவணங்ளை கொடுத்து ஸ்வைப்பிங் எந்திரங்கள் வாங்கி மோசடி செய்த என்ஜினீயர் கைது
x

ஓட்டல்கள் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து ஸ்வைப்பிங் எந்திரங்கள் வாங்கி மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 220 கிரெடிட், டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பனசங்கரி:

ஓட்டல் பெயரில் ஸ்வைப்பிங் எந்திரம்

பெங்களூரு பனசங்கரி 2-வது ஸ்டேஜில் விவேக் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றும் பாபா ரெட்டி என்பவர் ஓட்டலுக்கு வந்திருந்தார். அப்போது விவேக்கிடம், ஸ்வைப்பிங் எந்திரம் வாங்க அனுமதி கேட்டு, உங்கள் ஓட்டலில் இருந்து ஆவணங்கள் வந்துள்ளது. அவற்றை சரி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் தனது ஓட்டலில் ஸ்வைப்பிங் எந்திரம் வாங்க அனுமதி கேட்கவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது விவேக்கின் ஓட்டல் பெயரிலான ஆவணங்களை காட்டி, நவ்னித் என்பவர் அனுமதி கேட்டு இருப்பதை பாபா ரெட்டி காட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது ஓட்டல் பெயரில் போலி ஆவணங்களை கொடுத்து ஸ்வைப்பிங் எந்திரம் வாங்க முயன்ற நவ்னித் மீது பனசங்கரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவ்னித்தை தேடிவந்தனர்.

என்ஜினீயர் கைது

இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நவ்னித் பாண்டே (வயது 34) என்று தெரிந்தது. என்ஜினீயரான இவர், பனசங்கரி 2-வது ஸ்டேஜ் பகுதியில் தான் வசித்து வருகிறார். வங்கிகளில் இருந்த ஸ்வைப்பிங் எந்திரங்கள் வாங்குவதற்காக, பெங்களூருவில் இருக்கும் பிரபல ஓட்டல்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து வந்துள்ளார்.

பல ஓட்டல்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து 17 ஸ்வைப்பிங் எந்திரங்களை நவ்னித் வாங்கி மோசடி செய்திருந்தார். தனக்கு தெரிந்த நபர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களிடம் இருந்து கிரெடிட், டெபிட் கார்டுகளை வாங்கி, அவற்றை எந்திரத்தில் ஸ்வைப்பிங் செய்து பண பரிமாற்றம் செய்வது, பணத்தை பெற்று கடன் கொடுப்பது உள்ளிட்ட சம்பவங்களில் நவ்னித் ஈடுபட்டது தெரியவந்தது.

220 கார்டுகள் பறிமுதல்

கைதான நவ்னித் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 110 கிரெடிட் கார்டுகள், 110 டெபிட் கார்டுகள், 17 ஸ்வைப்பிங் எந்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், ஓட்டல்களின் போலி ஆவணங்கள், முத்திரைகள் சிக்கியது. மேலும் 3 மடிக்கணினிகள், 6 செல்போன்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

இந்த மோசடி குறித்து நவ்னித்திடம் விசாரணை நடத்துவதற்காக, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருவதாக பனசங்கரி போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story