மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்


மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 9 Jan 2024 3:00 PM IST (Updated: 9 Jan 2024 3:47 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே குரூப்-டி தேர்வு எழுதியவர்களிடம் இருந்து நிலத்தை லஞ்சமாக பெற்று, பணிகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாட்னா,

கடந்த 2004-2009ம் காலகட்டத்தில் அப்போதைய ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவின் பதவிக்காலத்தில், ரெயில்வே துறையின் குரூப்-டி பணிகளை நிரப்புவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்வு எழுதியவர்களிடம் இருந்து நிலத்தை லஞ்சமாக பெற்று, அதற்கு பதிலாக அவர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக லல்லு பிரசாத் யாதவ் மற்றும் அவருக்கு தொடர்புடைய நபர்களிடம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரி தேவி, மிசா பாரதி, ஹிமா யாதவ் உள்ளிட்டோர் மீது டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் இந்த குற்றப்பத்திரிகையில் ஹிருத்யானத் சவுத்ரி, அமித் கயால் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இவர்கள் லல்லு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களின் மின்-நகலை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை வரும் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.


Next Story