பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: முதல்-மந்திரிக்கு இ-மெயிலில் வந்த கடிதம்


பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: முதல்-மந்திரிக்கு இ-மெயிலில் வந்த கடிதம்
x

கோப்புப்படம் 

ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பை போன்று பெங்களூருவில் ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

ஓட்டலில் குண்டு வெடித்த நிலையில் பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரிக்கு இ-மெயிலில் கடிதம் மூலம் இந்த மிரட்டலை விடுத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி மதியம் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இதில், ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பை போன்று பெங்களூருவில் ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், போலீஸ் மந்திரி பரமேஸ்வர் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பி மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் 2.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.20.7 கோடி) கொடுக்க வேண்டும், இல்லையெனில் தாக்குதல் நடத்துவோம் என்றும் அந்த இ-மெயில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே ஓட்டலில் குண்டுவெடிப்பு நடந்துள்ள நிலையில், தற்போது மர்மநபர்கள் பெங்களூரு நகருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பெங்களூருவாசிகளை அச்சம் அடைய செய்துள்ளது.

இதுதொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெங்களூரு நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். நகரில் உள்ள பஸ், ரெயில் நிலையங்கள், முக்கிய கோவில்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story