தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்யுங்கள்; எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்யுங்கள்; எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 11 March 2024 12:15 PM IST (Updated: 11 March 2024 12:33 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்யுங்கள் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி,

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கலாம். எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன.

இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதிபெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15ம் தேதி ரத்து செய்தது.

மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? அரசியல் கட்சிகளுக்கு யார்? யார்? நிதி கொடுத்துள்ளனர் என்ற விவரத்தை மார்ச் 6ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 15ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க ஜுன் 30ம் தேதி வரை கால அவகாசம் தரும்படி சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மிகவும் சுலபமாக சேகரிக்கக்கூடிய தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன்? மிகவும் எளிமையான உத்தரவை பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது. கடந்த 26 நாட்களாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியது.

மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரத்தை எஸ்.பி.ஐ. வழங்கிய உடன் அதை வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடவும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், எஸ்.பி.ஐ. தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.


Next Story