தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா
மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.
புதுடெல்லி,
தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அருண் கோயலின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அருண் கோயல் பதவி விலகியுள்ளதால் தேர்தல் ஆணையர் காலிப்பணியிடங்கள் 2 ஆக உயர்ந்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், அருண் கோயல் பதவி விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ராஜினாமாவின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அருண் கோயலின் பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசின் செயலாளராக இருந்த அருண் கோயல், கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தின்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.