கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: சிக்கமகளூருவில் பொது இடங்களில் முககவசம் கட்டாயம்
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக சிக்கமகளூருவில் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் என கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு;
2020-ம் ஆண்டில்...
சீனாவின் உருவான கொரோனா வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆரம்பத்தில் லேசான தாக்கத்தை வெளிப்படுத்திய கொரோனா வைரஸ், நாளடைவில் கோர முகத்தை காட்ட தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதும், நாடு முழுவதும் ஊரடங்கு, சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்தது.
இதை தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது அலை வேகமெடுத்தது. கொரோனா கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தது. ஆனாலும், இந்த 3 அலைகளிலும் உலகம் முழுவதும் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர்.
அரசு உத்தரவு
இந்த நிலையில்கொரோனா 4-வது அலை மற்ற நாடுகளில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பலர் உயிரிழந்தனர். இதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா 4-வது அலை பரவல் தொடங்கியுள்ளது. தினமும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
முககவசம் கட்டாயம்
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பொதுமக்கள் செயல்படவேண்டும். அதேபோல பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.
குறிப்பாக அரசு அலுவலகம், வணிக வளாகங்கள், மார்க்கெட், திரையரங்குகள் உள்பட பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியும் கட்டாயம்.
மேலும் கொரோனா தடுப்பூசியும் போட்டு கொள்ளவேண்டும். இதுவரை 2 தடுப்பூசிகள் போட்டு கொண்டவர்கள், 3-வது தடுப்பூசிகளை போட்டு கொள்ளவேண்டும். வீடுகள் மற்றும் கடைகளில் சானிடைசர்கள் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.