தசரா யானைகள் ரூ.68 லட்சத்திற்கு காப்பீடு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு


தசரா யானைகள் ரூ.68 லட்சத்திற்கு காப்பீடு   மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தசரா விழாவில் பங்கேற்கும் 14 யானைகளுக்கு ரூ. 68 லட்சத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மைசூரு

தசரா விழா

அரண்மனை நகரம், சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தசரா விழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்தநிலையில் இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு தசரா விழாவில் 14 யானைகள் கலந்து கொள்கின்றன.

முதல் கட்டமாக 9 யானைகள் நாகரஒலே வனப்பகுதியில் இ்ருந்து மைசூரு அரண்மனை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

காப்பீடு

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தசரா விழாவில் பங்கேற்கும் 14 யானைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் காப்பீடு செய்யப்பட்டது. இதில் 10 ஆண் யானைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், 4 பெண் யானைகளுக்கு தலா ரூ.4½ லட்சமும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 14 யானைகளுக்கு ரூ.68 லட்சம் காப்பீடும், யானைகளுடன் வந்திருக்கும் பாகன்கள், காப்பாளர்கள், பராமரிப்பாளர்கள் ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் யானைகளால் பொதுமக்களின் சொத்து, உயிர் சேதம் ஏற்பட்டால் நஷ்ட ஈடு வழங்க ரூ.50 லட்சம் வரை காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த காப்பீடு திட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 31- ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் 8 யானைகளுக்கு அரண்மனை வளாகத்திலேயே நடைபயிற்சி மேற்கொண்டது.

நடைபயிற்சி

காரணம் அரண்மனை வளாகத்தில் உள்ள வெப்ப நிலை மற்றும் சுற்றுச் சூழலுக்கு யானைகள் பழகி கொள்ள வேண்டும். அதற்காக தான் யானைகளுக்கு அரண்மனை வளாகத்தில் நடைபயிற்சி அளிக்கப்பட்டது.

நேற்று 3-வது நாளாக யானைகள் மைசூரு டவுன் ராஜ வீதியில் நடை பயிற்சி சென்றன. 8 யானைகளும் கம்பீரமான நடை போட்டு சென்றன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

அப்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story