'சுதந்திரத்தின்போது இந்து, முஸ்லிம்கள் இடையே ராமர் கோவில் பிரச்சினை இருந்ததில்லை' - ராஜ்நாத் சிங்
அயோத்தியின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி திரும்ப கொண்டு வந்துள்ளார் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அயோத்தியின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி திரும்ப கொண்டு வந்துள்ளார் என்று தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது;-
"நாடு சுதந்திரம் அடைந்தபோது, ராமர் கோவில் குறித்து இந்து, முஸ்லிம்கள் இடையே பிரச்சினை இருந்தது இல்லை. அது இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருந்தது. ஏழைகளுக்காக நாம் உழைக்க வேண்டும் என்பதை கடவுள் ராமர் மற்றும் பண்டிதர் தீன தயாள் உபாத்யாயா ஆகிய இருவரும் நமக்கு உணர்த்தியுள்ளனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டுள்ளார். அரசியலில் இருக்கும் ஒரு நபரால் இத்தனை பக்தி உணர்வோடு இருக்க முடியும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அயோத்தியின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி திரும்ப கொண்டு வந்துள்ளார்."
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.