சல்மான் கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: இருவர் கைது


சல்மான் கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்:  இருவர் கைது
x
தினத்தந்தி 16 April 2024 1:29 PM IST (Updated: 16 April 2024 1:31 PM IST)
t-max-icont-min-icon

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு நபர்களை, மும்பை போலீசார், குஜராத்தில் இருந்து கைது செய்துள்ளனர்.

மும்பை,

நடிகர் சல்மான் கானின் வீடு, மராட்டிய மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர்.

சல்மான் கானுக்கு ஏற்கெனவே 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டு முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் சல்மான் கான் வீட்டு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம், புஜ் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விக்கி குப்தா, சாகர் பால் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story