பெங்களூருவில் ரூ.2 கோடி போதைப்பொருட்கள் சிக்கியது; நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது
பெங்களூருவில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கின. இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள், பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு உளிமாவு பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக உளிமாவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய 2 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நைஜீரியாவை சேர்ந்த இம்மானுவேல் மற்றும் உச்சென்னா லிவினுஸ் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். அவர்கள் வாட்ஸ்-அப்பில் குழு அமைத்து அதன் மூலம் ஆர்டர்கள் பெற்று போதைப்பொருட்களை வினியோகம் செய்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரூ.2 கோடி மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. உள்பட பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களது பாஸ்போர்ட்டு, செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் விற்பனை செய்யும் போதைப்பொருட்களுக்கு ஆன்லைன் வழிகளில் பணம் வசூலித்துள்ளனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.