மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் மணல் கடத்திய டிரைவர் கைது
மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் மணல் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு, 6 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மங்களூரு-
மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் மணல் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு, 6 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆறுகளில் மணல் திருட்டு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள ஆறுகளில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக மணலை மர்மநபர்கள் வாகனங்களில் திருடி செல்கிறார்கள். இந்த சம்பவத்தை தடுக்க ேபாலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும், போலீசார் ஆறுகள் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் மணல் திருட்டு சம்பவங்கள் குறைந்த பாடில்லை.
இந்தநிலையில், கடந்த 24-ந் தேதி மங்களூரு அருகே உள்ள பல்குனி ஆற்றில் மணல் திருடி கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். இதுதொடர்பாக ஆற்று மணல் கடத்த பயன்படுத்திய 15 படகுகள், 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நேத்ராவதி ஆறு
இந்தநிலையில், மங்களூரு டவுன் கண்ணூர் பகுதியில் நேத்ராவதி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக மங்களூரு மாநகர போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மர்மநபர்கள் தப்பியோடினர்.
அவர்களை போலீசார் துரத்தி சென்றனர். ஆனால் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஆற்று மணல் கடத்த பயன்படுத்திய ஒரு படகு, 5 லாரிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
வாகன சோதனை
இதேப்போல், கல்லாப்பு பகுதியில் உல்லால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியில் ஆற்று மணல் இருந்தது. விசாரணையில், நேத்ராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக மணலை ஏற்றி கொண்டு, அதனை உல்லால் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அரேகல்லு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் நஜிம் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து மங்களுரு மாநகர், உல்லால் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.