நாடு முழுவதும் ரெயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு
நாடு முழுவதும் உள்ள ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையை பின்பற்ற ரெயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
ஒடிசாவில் கடந்த 2-ந் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்தில் 288 பேர் பலியானது நாட்டையே உலுக்கியது.
அங்கு பெயர்ந்துபோன தண்டவாளங்களை சரிசெய்த நிலையில், தற்போது மேல்நோக்கு, கீழ்நோக்கு தடங்களில் 7 ரெயில்கள் மட்டுமே நின்று சென்றன. அவையும் பெரும்பாலும் உள்ளூர் ரெயில்கள்தான். இந்த விபத்தின் பின்னணி என்ன என்பது இன்னும் உறுதிபடத்தெரியவில்லை. இதில் நாசவேலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள பகனகா பஜார் ரெயில் நிலையத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் 'லாக்' புத்தகத்தையும், இன்னும் சில கருவிகளையும் கைப்பற்றி உள்ளனர்.
இந்தநிலையில், ரெயில் நிலையங்களில் அமைந்துள்ள ரெயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், லெவல் கிராசிங்களுக்கான தொலை தொடர்பு சாதனங்கள், சிக்ன; அமைப்புகள் ஆகியவை அடங்கிய ரிலே அறைகளுக்கு இரட்டைப்பூட்டு முறையில் பின்பற்றுமாறு ரெயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது. ஒடிசா ரெயில் விபத்துக்கு சிக்னல் அமைப்பு அடங்கிய ரிலே அறையில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பாதுகாப்பை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.