மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்: தேவாலயத்தில் திரையிடப்பட்டதால் பரபரப்பு
விடுமுறை காலத்தில் இறை நம்பிக்கை பயிற்சிக்கு வருபவர்களுக்கு மணிப்பூர் ஸ்டோரிஸ் என்ற ஆவணப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது
பெரும்பாவூர்,
கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் கேரளாவில் திரையிடப்படுவதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இடுக்கி மறை மாவட்டத்தில் உள்ள ஜீரோ மலபார் தேவாலயத்தில் பங்கு தந்தை ஜீன்ஸ் காரக்கட் என்பவர் மூலம் கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக விமர்சனம் எழுந்ததால், இந்த படத்தை திரையிடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதை மீறி கண்ணூர் மறைமாவட்டத்தில் உள்ள செம்பண்தொட்டி தேவாலயத்தில் கேரளா ஸ்டோரிஸ் படம் திரையிடப்பட்டது. இதேபோல் எர்ணாகுளத்தில் உள்ள சில தேவாலயங்களில் கேரளா ஸ்டோரிஸ் திரையிடப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அதற்கு போட்டியாக மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பான ஆவணப்படம், எர்ணாகுளம் அங்கமாலி மறை மாவட்டத்தின் கீழ் செயல்படும் சான்ஜோபுரம் தேவாலயத்தில் திரையிடப்பட்டது. அங்கு விடுமுறை காலத்தில் இறை நம்பிக்கை பயிற்சிக்கு வருபவர்களுக்கு மணிப்பூர் ஸ்டோரிஸ் என்ற ஆவணப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
மணிப்பூரில் கலவரத்தை தடுப்பதில் மணிப்பூர் அரசு படுதோல்வி அடைந்து உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிடவில்லை என்று கே.சி.பி.சி. அமைப்பு தெரிவித்து உள்ளது.