மணிப்பூரில் கலவரம் குறித்து விசாரிக்க மாவட்ட வாரியாக குழுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்...!
மணிப்பூர் கலவரத்தை அரசாங்கம் கவனமாக நிலைமையைக் கையாண்டு வருவதாகவும், வழக்குகளை பிரித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
புதுடெல்லி,
மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் சட்டம்-ஒழுங்கு செயலிழந்து விட்டதாக கடுமையான அதிருப்தியை சுப்ரீம் கோர்ட்டு வெளிப்படுத்தியிருந்தது. இவ்விவகாரத்தில் மாநில டிஜிபி ராஜீவ் சிங் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன் டிஜிபி ராஜீவ் சிங் இன்று நேரில் ஆஜரானார்.
அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி வாதிடும்போது எந்தவொரு வெளிப்புற விசாரணையையும் அனுமதிக்காமல், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என கூறினார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான பெண் அதிகாரி தலைமையிலான மாவட்ட அளவிலான குழுக்களால் விசாரிக்கப்படும்.
அரசாங்கம் மிகவும் கவனமாக நிலைமையைக் கையாண்டு வருவதாகவும், வழக்குகளை பிரித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.