சபரிமலையில் 39 நாட்களில் ரூ.204.30 கோடி வசூல் - தேவஸ்தானம் தகவல்
சபரிமலையில் நேற்று வரை சுமார் 31,43,163 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
நாளை மண்டல பூஜை முடிந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இரவு 11 மணிக்கு மூடப்படும். மேலும் மகரவிளக்கு விழாவையொட்டி டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் சபரிமலைக்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 18 கோடி ரூபாய் வருமானம் குறைந்துள்ளது. மண்டல சீசன் துவங்கி 39 நாட்களுக்கு பிறகு மொத்த வருவாயாக ரூ.204.30 கோடி கிடைத்துள்ளது. சபரிமலையில் நேற்று வரை சுமார் 31,43,163 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். காணிக்கையாக ரூ.63.89 கோடியும், அரவணை பிரசாதம் விற்பனையின் மூலம் ரூ.96.32 கோடியும் மற்றும் அப்பம் விற்பனையின் மூலம் ரூ.12 கோடிக்கு வருமானம் கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு சுமார் ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்தாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.