பெங்களூருவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்; போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை


பெங்களூருவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்; போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
x

பெங்களூருவில் ராஜ கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினார்கள்.

பெங்களூரு:

மழையால் பெரும் பாதிப்பு

பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், கே.ஆர்.புரம், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக 130-க்கும் மேற்பட்ட லே-அவுட்டுகள், 20-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி நின்றது.

மழை பாதிப்பு ஏற்பட ஏரிகள் மற்றும் ராஜ கால்வாய் நிலங்கள் ஆக்கிரமிப்பே முக்கிய காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஏரி, ராஜ கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கட்டிடங்களை இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். அதன்படி, கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த நிலையில், மகாதேவபுரா மண்டலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நேற்று அதிகாரிகள் மேற்கொண்டனர். மகாதேவபுரா மண்டலத்தில் உள்ள தொட்டனகுந்தி, ஏ.இ.சி.எஸ். லே-அவுட், பசவனபுரா, சின்னப்பனஹள்ளி, மாரத்தஹள்ளி, முனேகொலலு, செல்லகட்டே உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பெரும்பாலும் ராஜ கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களே அகற்றப்பட்டன.

நடைபாதை, சாலை உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த காம்பவுண்டு சுவர்களும் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் 4 பொக்லைன் வாகனங்கள், கிரேன் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

8 கட்டிடங்கள் அகற்றம்

கருடாச்சார் பாளையா அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியின் மைதானம் மற்றும் காம்பவுண்டு சுவர்கள் ராஜகால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கல்லூரியின் காம்பவுண்டு சுவர், மைதான பகுதி இடித்து அகற்றப்பட்டது. குறிப்பாக ஏ.இ.சி.எஸ். லே-அவுட்டில் 8 கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. அந்த லே-அவுட்டின் நுழைவு வாயில், பிற கட்டிடங்களை இடித்து அதிகாரிகள் அகற்றினார்கள். அப்போது அங்கிருந்த கட்டிட உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு அழுதாா்கள்.

ஏ.இ.சி.எஸ். லே-அவுட்டில் இருந்த ஒரு மருந்து கடை முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. இதுபோல், சின்னப்பனஹள்ளி, பசவனபுரா, மாரத்தஹள்ளி, முனேகொலலு, செல்லகட்டே பகுதிகளிலும் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள், வீடுகள், கடைகள், காம்பவுண்டு சுவர்கள், சில வீடுகளின் முன்பக்கத்தில் இருந்த பால்கனிகள் என ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

சாக்கடை கால்வாய் விரிவாக்கம்

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய்களை விரிவாக்கம் செய்யும்படி அதிகாரிகளுக்கு, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

வருவாய்த்துறை அதிகாாிகள் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதோ?, அங்கெல்லாம் கட்டிடங்களில் குறியீடுகள் வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதன் அடிப்படையிலேயே மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story