நாங்கள் குடியிருக்கும் வீடுகளை அரசு இடிக்க வேண்டும்: முதல்-மந்திரியிடம் குடியிருப்புவாசிகள் வினோத கோரிக்கை!
அடுக்குமாடி குடியிருப்பை இடிக்குமாறு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கான்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கான்பூரில் உள்ள கேடிஏ ரெசிடென்சி சொசைட்டியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பை இடிக்குமாறு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் இதுபோன்ற வேண்டுகோள் விடுப்பது இதுவே முதல் முறை.மேலும் இந்த கட்டிடம் இடிக்கப்பட உள்ளது என்ற பேனரை வாயிலின் முன்புறம் வைக்கவும் கூறியுள்ளனர்.
கான்பூரில் கேடிஏ ரெசிடென்சி சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்திற்கு தரமற்ற கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டிடத்தில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. கட்டடம் பாழடைந்த நிலையில் இருப்பதால், இடிந்துவிழும் அபாயம் உள்ளது.
ஏற்கெனவே உறுதியளித்தபடி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.ஆகவே அந்த கட்டிடத்தை இடிப்பது நல்லது என்ற முடிவெடுக்கப்பட்டு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் இதுபோன்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 20 - 30 வருடங்களாக உழைத்து சம்பாதித்த பணத்தில் மாதத்தவணை மூலம் வீடு வாங்குகிறார்கள். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட 5-10 ஆண்டுகளுக்குள், அந்த இடத்தை வாடகைக்கு விடுவது கூட கடினமாகிவிடும்.
இதனால் ரூ.30-50 லட்சம் செலுத்தி வாங்கும் சொந்த வீட்டில் , 10 முதல் 15 வருடங்கள் மட்டுமே வாழ்வதற்கு தகுதியானதாக அவ்விடம் உள்ளது வேதனையளிக்கிறது என குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.