2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரம்: பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எந்த அடையாள சான்றும் இன்றி மாற்றிக்கொள்ள முடியும் என்ற வங்கிகள் அறிவித்ததற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப்பெற இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. இது, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருக்கும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. கடந்த 23 ஆம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப செலுத்துவதற்கான நடைமுறை தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் அந்த நோட்டுக்களை கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும்.
ஒருவர் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் என்ற அளவில்2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ள முடியும், அதற்கு அடையாள ஆவணமோ, வேண்டுகோள் சீட்டோ தேவையில்லை. ஒருவர் ஒரு முறைக்கு ரூ.20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இதனிடையே, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஆவணங்கள் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என்று வங்கிகள் அறிவித்ததற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.