டெல்லியில் திடீர் மின்தடை பொதுமக்கள் அவதி


டெல்லியில் திடீர் மின்தடை பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 12 Jun 2024 1:45 AM IST (Updated: 12 Jun 2024 1:46 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கடும் வெப்பத்திற்கு இடையே திடீர் மின்தடையால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்கள் குடிநீருக்காக பரிதாபமாக அலைகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, நேற்று ஏற்பட்ட திடீர் மின்தடையால் மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர்.

டெல்லி மாநிலம் தனது மின்சார தேவையை 15 சதவீதம் சுயஉற்பத்தி மூலமாகவும், 85 சதவீதம் மத்திய தொகுப்பு மூலமாகவும் பூர்த்தி செய்கிறது. கோடைகாலத்தில் டெல்லியின் அதிகபட்ச மின்சார தேவை என்பது 8 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும். ஏனெனில் கோடை வெப்பத்துக்கு இடையே குறைந்தபட்சம் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது. பணக்காரர்கள் ஏ.சி. இல்லாமல் இருக்கமாட்டார்கள்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2.10 மணிக்கு பல இடங்களில் திடீரென மின்சாரம் தடைபட்டது. நட்டநடு நேரம், வெப்பம் உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட இந்த மின்தடையால் மக்கள் நொந்து போனார்கள். வீட்டைவிட்டும் வெளியே வரமுடியாது. உள்ளேயும் முடங்க முடியாது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மின்தடைக்கான காரணம் பற்றி கேட்டபோது, டெல்லிக்கு 1,200 மெகாவாட் மின்சாரம் வினியோகிக்கும் உத்தரபிரதேச மாநிலத்தின் மண்டோலா துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி மின்சாரத்துறை மந்திரி அதிஷி தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டார். தலைநகரில் தேசிய மின்கட்டமைப்பு தோல்வி அடைந்து விட்டதாக குறிப்பிட்ட அவர், மின்தடை தொடராமல் இருக்க மத்திய மின்சாரத்துறையின் புதிய மந்திரியை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மறுசீரமைப்பு செயல்முறை தொடங்கியிருப்பதாகவும், படிப்படியாக மின்வினியோகம் சீராகி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, டெல்லியில் 7 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றதை மறைமுகமாக குறிப்பிட்டு, "தயவுசெய்து பழி வாங்க வேண்டாம், இது டெல்லி, 2 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவிக்கிறோம்" என்று ஆம் ஆத்மி அரசை சாடுவதாக சமூக வலைத்தளத்தளங்களில் பதிவுகள் உலா வருகின்றன. பலரும் தாங்கள் படும் அவதிகளை சுட்டிக்காட்டி பதிவு வெளியிட்டனர்.


Next Story