கடும் வெப்ப அலையால் தவித்த மக்களுக்கு சற்று ஆறுதல்.. டெல்லியை குளிர்வித்த மழை


Delhi gets light rain
x

நாடு முழுவதும் மார்ச் 1 முதல் ஜூன் 18-ம் தேதி வரை வெப்ப அலையின் தாக்கத்தால் 110 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டெல்லியில் வெப்ப அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. வெப்ப அலை மற்றும் வெப்பம் தொடர்புடைய பாதிப்புகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த கோடைகாலத்தில் நாடு முழுவதும் மார்ச் 1 முதல் ஜூன் 18-ம் தேதி வரை வெப்ப அலையின் தாக்கத்தால் 110 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் வெளியே வருவதற்கு பயந்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் லேசான மழை பெய்தது. வெப்ப அலைக்கு சற்று ஓய்வு கொடுக்கும் வகையில் இந்த மழை அமைந்தது. தொடர்ந்து வெயிலின் கோரத்தாண்டவத்தால் தவித்த மக்களும் நிம்மதி அடைந்தனர். மழை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.


Next Story