மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
பணமோசடி தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
புதுடெல்லி,
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று ரோஸ் அவன்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 18 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் சிசோடியாவுக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது..