டெல்லி காற்று மாசு விவகாரம்; பயிர்க் கழிவுகளை எரிப்பது நிறுத்தப்பட வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தல்


டெல்லி காற்று மாசு விவகாரம்; பயிர்க் கழிவுகளை எரிப்பது நிறுத்தப்பட வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தல்
x

அடுத்த குளிர்காலம் வருவதற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்வோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். காற்று மாசு ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், டெல்லியின் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதன் காரணமாக டெல்லியில் அதிக அளவிலான காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலங்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், பயிர்க் கழிவுகளை எரிப்பது நிறுத்தப்பட வேண்டும் எனவும், அடுத்த குளிர்காலம் வருவதற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தை கையாள்வது குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களுக்கான செயல்திட்டங்கள் தயார் செய்யப்பட்டதை குறிப்பிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இந்த செயல்திட்டங்களை உடனடியாக செயல்படுத்தி 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story