முகமது நபி குறித்து அவதூறு பேச்சு : தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜா சிங்கின் கட்சி இடை நீக்கத்தை ரத்து செய்தது பாஜக
முகமது நபி குறித்து அவதூறு பேசிய தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜா சிங்-ன் கட்சி இடை நீக்கத்தை பாஜக ரத்து செய்துள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜா சிங். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கியை விமர்சித்தும், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்களை மேற்கோள்காட்டியும் பேசினார்.
இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகவும், டி ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் டி.ராஜாவை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட டி.ராஜா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த கோர்ட்டு டி.ராஜாவிற்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. ராஜா சிங் மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஜக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "சம்பவம் குறித்து கட்சியின் மத்திய ஒழுங்கு குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு நீங்கள் அளித்த விளக்கத்தை ஆராய்ந்ததில் குழுவானது உங்களது இடைநீக்கத்தை ரத்து செய்கின்றது", என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதன் மூலம் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் அவர் மீண்டும் கோஷ்யமஹல் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.