காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன்-பிரதமர் மோடி
மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக ஏப்ரல் 26-ந் தேதி, மே 7-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் தலைவர்களின் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி பாகல்கோட்டையில் நடைபெற்ற பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அம்பேத்கர், அரசியல் சாசனம் உங்களுக்கு வழங்கிய உரிமையை (இட ஒதுக்கீட்டை) பறித்து மத அடிப்படையில் உங்களின் வாக்கு வங்கியை (முஸ்லிம்களுக்கு வழங்க திட்டம்) பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பா.ஜனதா எம்.பி.க்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவுகளை சேர்ந்தவர்கள் தான் அதிகம்.
சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க காங்கிரசார் விரும்புகிறார்கள். இதை நீங்கள் அனுமதிப்பீர்களா?. நான் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தை அளிக்க விரும்புகிறேன், அது என்னவெனில் காங்கிரசின் இந்த நோக்கம் அதாவது மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன்.
உங்களின் உரிமை, உங்களின் இட ஒதுக்கீட்டை காக்க நான் எந்த உச்சத்திற்கும் செல்வேன். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தேர்தலில் தோற்றவர்கள் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான வீடியோவில் எனது குரலை சேர்த்து வெளியிடுகிறார்கள். அத்தகையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.