திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா


திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாள்:  கல்ப விருட்ச வாகனத்தில்  மலையப்ப சாமி வீதி உலா
x

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாளான இன்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி கல்ப விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தசரா விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் நவராத்திரி பிரம்மோற்சவம் களை கட்டி உள்ளது.

தினமும் காலை, இரவு நேரத்தில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஏழுமலையான் முத்து பந்தல் வாகன வீதிஉலா வந்தார்.

இந்நிலையில் 4-வது நாளான இன்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சாமி எழுந்தருளி கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தையொட்டி மாட வீதியில் சாமி வீதியுலா முன்பு கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது. இன்று இரவு சர்வபூலபால வாகனத்திலும் வீதிஉலா வர உள்ளார்.

பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நாளை நடைபெற உள்ளது. கருட சேவை தரிசனத்துக்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கருட சேவையை முன்னிட்டு இன்று முதல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை வரை மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.


Next Story