பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது


Dada Saheb Phalke Award to Bollywood actor Mithun Chakraborty
x

தான் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மிதுன் சக்கரவர்த்தி வென்றார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் கடந்த 1976-ம் ஆண்டு வெளியான 'மிருகயா' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இதன் மூலம் அறிமுக படத்திலேயே தேசிய விருது வென்ற நடிகர் என்ற பெருமையை பெற்றார் மிதுன் சக்கரவர்த்தி.

அதனைத்தொடர்ந்து, 1982-ம் ஆண்டு வெளியான 'டிஸ்கோ டான்ஸர்' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்றார். பின்னர்,' தஹதர் கதா' மற்றும் 'சுவாமி விவேகானந்தர்' ஆகிய படங்களில் நடித்ததற்காக மேலும் இரண்டு தேசிய விருதுகளை மிதுன் வென்றார். தமிழில் இவர், 'யாகாவாராயினும் நா காக்க' படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெறும் 70 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் மிதுனுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மிதுனுக்கு மதிப்புமிக்க பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story