மக்கள் பணத்தை கொள்ளை அடித்ததாக விமர்சனம்; சித்தராமையாவுக்கு, சி.டி.ரவி எம்.எல்.ஏ. கண்டனம்


மக்கள் பணத்தை கொள்ளை அடித்ததாக விமர்சனம்; சித்தராமையாவுக்கு, சி.டி.ரவி எம்.எல்.ஏ. கண்டனம்
x

மக்கள் பணத்தை கொள்ளை அடித்ததாக விமர்சித்த சித்தராமையாவுக்கு சி.டி.ரவி எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

21 அடி உயர ஆஞ்சநேயர் சிலை

சிக்கமகளூரு மாவட்டம் சந்திரதிரிகோண மலையில் தத்தாத்ரேயா பீடத்திற்கு செல்லும் வழியில் கவிகள்கண்டி எனும் மலை உள்ளது. அந்த மலையின் உச்சியில் 21 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, கிருஷ்ணர் சிலை ஒரே கல்லில் வடிவமைத்து வைக்கப்பட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதையொட்டி நேற்று சி.டி.ரவி எம்.எல்.ஏ., மந்திரி முனிரத்னா, நகரசபை தலைவர் வேணுகோபால், நகர வளர்ச்சி தலைவர் ஆனந்த் ஆகியோர் சந்திரதிரிகோண மலைக்கு சென்றனர். அவர்கள் சிலைகளை மலைக்கு கொண்டுவரும் வழி, எந்த இடத்தில் சிலைகளை நிறுவ வேண்டும் என்று பார்வையிட்டு தேர்வு செய்தனர். மேலும் எந்த திசையில் சிலைகளை நிறுவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பேட்டி

தற்போது கிருஷ்ணர் சிலை, அல்லாம்புரா கிராமத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயர் சிலையை வடிக்கும் பணி நடந்து வருகிறது. சிலைகள் தயாரானதும் விரைவில் மலைக்கு கொண்டு சென்று கும்பாபிஷேகம் நடத்தி பொதுமக்கள் தரிசிக்க வழிவகை செய்யப்படும் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்தார். அதையடுத்து சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான்(சி.டி.ரவி) மக்கள் பணத்தை கொள்ளை அடித்ததாக முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா குற்றம்சாட்டி வருகிறார். என் மீது குற்றச்சாட்டு கூறும் அவர் அதை நிரூபிக்க வேண்டும். அதற்கு சித்தராமையா தயாரா?. சித்தராமையா ஏராளமான அவப்பெயர்களை சம்பாதித்து உள்ளார்.

இதுவரை 4 முறை

நான் இதுவரை 4 முறை எம்.எல்.ஏ.வாகி இருக்கிறேன். என் மீது மக்களுக்கு அன்பு இல்லை என்றால் என்னை அவர்கள் வெற்றிபெற வைத்திருக்க மாட்டார்கள். நான் கொள்ளை அடித்தேனா, இல்லையா என்பது மக்களுக்கு தெரியும். கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வராது என்று சித்தராமையா கூறினார்.

அதேபோல் 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், நானே(சித்தராமையா) முதல்-மந்திரி ஆவேன் என்றும் சித்தராமையா கூறி வந்தார். ஆனால் அவரது எண்ணம் அனைத்தையும் மக்கள் சிதைத்துவிட்டனர்.

மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் தனது சொந்த ஊரிலேயே தோல்வியை சந்தித்தார். நான்(சி.டி.ரவி) கொள்ளையடித்தேன் என்று குற்றச்சாட்டு கூறும் சித்தராமையா, அதை அவரது ஆட்சி காலத்தில் கண்டுபிடித்து இருக்கலாம். மேலும் தற்போது அவருக்கு உள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவியை பயன்படுத்தி கண்டுபிடித்து இருக்கலாம். அதைவிடுத்து வெறும் வாய்மொழியாக என் மீது குற்றச்சாட்டு கூறுவதை நான் கண்டிக்கிறேன்.

நம்பிக்கை

சிக்கமகளூருவில் கிராம பஞ்சாயத்து தேர்தல் முதல், நாடாளுமன்ற தேர்தல் வரை மீண்டும், மீண்டும் பா.ஜனதா வெற்றி பெற்று வருவதற்கு பா.ஜனதாவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம். அந்த நம்பிக்கையை பிரதமர் மோடியும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story