ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி... மேலும் ஒரு எம்.பி. கட்சியில் இருந்து விலகல்
கட்சியில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால் பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகுவதாக ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு அறிவித்துள்ளார்.
விஜயவாடா,
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு. இவர் நரசராவ்பேட்டை மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு தனது எம்.பி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அத்துடன் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், "ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. கட்சியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொண்டர்களிடையே மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகுகிறேன்" என தெரிவித்துள்ளார். இது முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு கூடுதல் நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ கிருஷ்ணதேவராயலுவை நரசராவ்பேட்டைக்கு பதிலாக, குண்டூர் தொகுதியில் போட்டியிடுமாறு கட்சி கூறியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் தெரிவித்தன.
முன்னதாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அல்லா ராமகிருஷ்ண ரெட்டி, சில வாரங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.