உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு அகமதாபாத்தில் ஓட்டல் அறைகளின் கட்டணம் உயர்வு!
வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
அகமதாபாத்,
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், துபாய், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். இதன் காரணமாக, அகமதாபாத்தில் உள்ள ஓட்டல் அறைகளின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளன. ஓட்டல் அறைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள சிறந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஒரு இரவுக்கு ரூ.2 லட்சமாக கட்டணம் உயர்ந்துள்ளது. நட்சத்திர ஓட்டல்கள் மட்டுமின்றி சாதாரண ஓட்டல்களும் கூட இதனைப் பயன்படுத்தி ஐந்து முதல் ஏழு மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. பொதுவாக ஒரு இரவுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை கட்டணம் வசூலித்து வந்த ஓட்டல்கள் ரூ.20 ஆயிரம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
அகமதாபாத் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு ஓட்டல் அறைகளின் கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.