அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: நாடு முழுவதும் இன்று நோய் தடுப்பு ஒத்திகை
புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) நோய் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
அச்சுறுத்தும் கொரோனா
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியிலேயே வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்த இந்த வைரஸ், லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் காவு வாங்கி விட்டது. இந்த எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்த பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா வைரஸ் அடிக்கடி மாறுபாடு அடைந்து புதிய திரிபுகளாக உருவாகி மேலும் அச்சுறுத்தலை கூட்டி வருகிறது.
சீனாவில் கோரத்தாண்டவம்
அந்த வகையில் பி.எப்.7 என்ற பெயரில் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் தாயகமான சீனாவில் இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
தினமும் லட்சக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிக அளவில் தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது. இறுதிச்சடங்கு செய்வதற்காக ஆஸ்பத்திரிகளின் வெளியே நீண்ட வரிசையில் சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உலகை உலுக்கி வருகின்றன. இதைப்போல ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளும் இந்த புதிய கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கின்றன.
இந்தியாவிலும் பாதிப்பு
இப்படி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த பி.எப்.7 ரக கொரோனா இந்தியாவிலும் ஏற்கனவே தலைகாட்டி விட்டது. குஜராத், ஒடிசாவில் இந்த தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப்போல நாட்டில் நிகழும் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் சராசரியாக 200 என்ற எண்ணிக்கையில் நீடிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி முந்தைய 24 மணி நேரத்தில் 196 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர்.
இதனால் இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு உள்ளது.
நோய்த்தடுப்பு ஒத்திகை
இதில் முக்கியமாக, மேற்படி புதியவகை தொற்று கண்டறியப்பட்ட நாடுகள் உள்பட வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அறிவுறுத்தி உள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் இந்த பரிசோதனை வேகமடைந்து இருக்கிறது. அத்துடன் மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசஅதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தொடர்ந்து ஆலேசானை கூட்டங்கள் நடத்தப்பட்டு புதியவகை கொரோனா குறித்து உஷார்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனாவால் ஏற்படும் எத்தகைய நெருக்கடிகளையும் எதிர்கொள்ள சிறப்பாக தயாராகும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி இந்த பிரமாண்ட மருத்துவ ஒத்திகை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது.
மாவட்டங்களில் மருத்துவ வசதி
அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ வசதிகள், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன் இணைந்த படுக்கைகள், தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை, டாக்டர்கள், ஆயுஷ் டாக்டர்கள், நர்சுகள், துணை பணியாளர்கள், துணைநிலை பணியாளர்கள் உள்ளிட்டோாின் இருப்பு நிலை உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் கொரோனாவை கையாளும் பயிற்சி பெற்ற ஊழியர் நிலை, வெண்டிலேட்டர் கருவியை கையாளும் பயிற்சி பெற்றவர் எண்ணிக்கை, நவீனஉயிர்காக்கும் கருவிகளை பயன்படுத்தும் திறன் பெற்றவர்களின் நிலை, பரிசோதனை கருவிகள் இருப்பு உள்ளிட்டவற்றுக்கும் இந்த ஒத்திகையில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
பொது சுகாதார நடவடிக்கைகள்
முன்னதாக பல்வேறு உலக நாடுகளில் இந்த தொற்று அதிகரிப்பதை சுட்டிக்காட்டியிருந்த சுகாதார அமைச்சகம், அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், அனைத்து சவால்களையும் சந்திக்க தேவையான பொது சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என அறிவுறுத்தி இருந்தது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநிலங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில், 'கொரோனா சவால்களால் எழும் மருத்துவ வசதிகளுக்கான தேவைகளின் அதிகரிப்பை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும், மாவட்டங்களும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது' என குறிப்பிட்டு இருந்தார்.
டெல்லியில் ஆய்வு
இதற்கிடையே மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் கொரோனாவை எதிர்கொள்ள மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதில் முக்கியமாக, உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மற்றும் ஆக்ராவில் 2 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் நோய்த்தடுப்பு ஒத்திகை உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி உள்ளது.
இதைப்போல டெல்லியில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் சுகாதார அதிகாரிகள் நேற்று முதல் நேரில் சென்று மருத்துவமனைகளின் தயார் நிலை குறித்த ஆய்வை தொடங்கி உள்ளனர்.