நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டர்களாக செயல்படக் கூடாது- சுப்ரீம் கோர்ட்டு தடாலடி
அரசு வழக்கறிஞர் நடத்தும் குற்றவியல் விசாரணை, சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை என்ற அச்சம் பொதுமக்களின் மனதில் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த 1995-ம் ஆண்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பை 2014-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கணவன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன், டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பில், நீதிபதிகள் சில தடாலடியான கருத்துக்களையும், வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் பங்கு குறித்தும் விளக்கமாக கூறினர். நீதிபதிகள் கூறியதாவது:-
ஒரு நீதிபதி நீதிக்கு உதவியாக விசாரணை நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். சில வழிகளில் வழக்கறிஞர் மந்தமாக இருந்தாலும், நீதிமன்றம் நடைமுறைகளை திறம்பட கட்டுப்படுத்த வேண்டும். இதனால் உண்மை வெளிப்படும்.
அரசுத் தரப்பு வழக்கறிஞரின் சேவை மற்றும் நீதித்துறைக்கு இடையிலான உறவுகள்தான், குற்றவியல் நீதி அமைப்பின் மூலக்கல் ஆகும். அதனால்தான், அரசு வழக்கறிஞர் பதவி நியமனம் போன்ற விஷயங்களில் அரசியல் ரீதியாக எந்த ஒரு அம்சமும் இருக்கக் கூடாது.
வழக்கின் உண்மை நிலவரங்களை கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றத்தின் கடமை ஆகும். நீதிமன்றங்கள் விசாரணையில் பங்கு வகிக்க வேண்டும். சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக செயல்படக்கூடாது. வழக்குத் தொடரும் அமைப்பின் தரப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் கடமை தவறுதலை நீதிமன்றம் கவனிக்கவேண்டும்.
வழக்குகளை நடத்துவதற்கு பொறுப்பான மற்றும் மேல்முறையீடு செய்யக்கூடிய அரசு வழக்கறிஞர்கள், விசாரணை நடவடிக்கைகளில் நீதிபதிகளுக்கு உதவும் சகாக்களில் ஒருவர்.
சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை என்பது குற்றவியல் நீதித்துறையின் அடித்தளமாகும். அடிக்கடி அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறி வழக்கிற்கு விரோதமாக மாறுகிறார்கள். அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் நடத்தும் குற்றவியல் விசாரணை, சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை என்ற அச்சம் பொதுமக்களின் மனதில் உள்ளது.
பல்வேறு மேல்முறையீட்டு வழக்குகளில், பிறழ் சாட்சியிடம் நடைமுறையில் பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள வகையில் அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்வதில்லை.
இந்த வழக்கைப் பொருத்தவரை, குற்றவாளியின் மைனர் மகள் நேரில் பார்த்த சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது அவர் அரசுத் தரப்பு வழக்கை ஆதரிக்கத் தவறியதால், அவர் பிறழ் சாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனினும், நிராயுதபாணியாகவும் ஆதரவற்றவராகவும் இருந்த பெண்ணை கத்தியால் குத்தியதை நீதிமன்றம் கவனிக்காமல் விடக்கூடாது. அதனால் மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
மேற்கூறிய அனைத்து காரணங்களுக்காகவும், மனுதாரருக்கான தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
மனுதாரர் இதுவரை 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாலும், 65 வயது நிரம்பியதாலும் தண்டனையை குறைக்க வேண்டி மாநில அரசிடம் முறையிடலாம். அப்படி அவர் முறையிட்டால், அதை அரசு பரிசீலித்து 4 வாரங்களுக்குள் சட்டத்தின்படி உரிய முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.