சிவமொக்காவில் தொடர் மழை துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 35,868 கன அடி நீர் திறப்பு
சிவமொக்காவில் தொடர் மழையால் துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 35,868 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சிவமொக்காவில் நீர்நிலைகள் மற்றும் ஆறுகள், ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இந்தநிலையில் தொடர்மழையால் துங்கா ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று மதிய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 868 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் துங்கா அணை மொத்த கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து நீரை சேமித்தால் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வினாடிக்கு 35,868 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது அணைக்கு வரும் மொத்த நீரும், திறந்துவிடப்படுகிறது. இதனால் சிவமொக்கா கொரப்பனபாளைய சத்திரம் அருகே உள்ள துங்கா ஆற்றின் மண்டபம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதேபோல தீர்த்தஹள்ளியில் பெய்த மழையால் பத்ரா அணைக்கு வினாடிக்கு 59 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பத்ரா அணையில் இருந்து குறிப்பிட்ட அளவு மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.