ராகுல்காந்திக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர்,
ராகுல் காந்தியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக ஜம்முவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கார்கே, "ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் "நச்சு மனப்பான்மைக்கு" பயப்பட மாட்டோம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காந்தியை தரக்குறைவாகப் பேசிய பா.ஜ.க. தலைவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார். ஏனெனில் மோடி அவர்களுக்கு பயப்படுகிறார்.
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எங்கள் தலைவர்களின் நாக்கை அறுப்பதாகப் பேசுகிறார்கள். உண்மையைப் பேசியதற்காக ராகுல் காந்தி மீது தரக்குறைவான விமர்சனங்கள் மற்றும் அவர் மீது வெறுப்புச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
காங்கிரசை யாராவது பயமுறுத்த முயன்றால் நாங்கள் பயப்பட மாட்டோம், நம்மை பயமுறுத்துபவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் போது வீட்டில் அமர்ந்து இருந்தார்கள், நம் மக்கள் போராடி உயிரைக் கொடுத்தார்கள், காந்தி குடும்பத்திற்கு தியாக வரலாறு உண்டு. உங்கள் பங்களிப்பு என்ன என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள்.
மகாத்மா காந்தி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் தேசத்திற்காக உயிரைக் கொடுத்தவர்கள் என்றும், ராகுலை பயங்கரவாதி மற்றும் தேசவிரோதி என்றும் அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.) கூறுகிறார்கள். அவர்கள் எங்கள் தலைவர்களின் நாக்கை வெட்டுவது பற்றி பேசுகிறார்கள். இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்" என்று கார்கே கூறினார்.