நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 'வார் ரூம்' அமைத்த காங்கிரஸ்
வார் ரூமின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, நேர்காணல் குழு உள்ளிட்ட குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மத்திய 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை 'வார் ரூம்' மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார் ரூமின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருண் சந்தோஷ், அரவிந்த் குமார், நவீன் சர்மா உள்ளிட்டோர் இதன் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.