ஜோதிமணி உள்பட 4 மக்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ரத்து


ஜோதிமணி உள்பட 4 மக்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ரத்து
x

மக்களவையில் 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை சபாநாயகர் ஓம் பிர்லா ரத்து செய்தார்.

புதுடெல்லி,

நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலிருந்து, இரு அவைகளையும் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 27 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த இடைநீக்கத்தை ரத்துசெய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலர் 50 மணிநேர தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். வெயில், மழை, கொசுக்கடிகளையும் சகித்துக்கொண்டு ஜனநாயகப் போராட்டத்தை நடத்திவருவதாகவும், தங்கள் மீதான இடைநீக்க உத்தரவு ஒரு ஜனநாயகப் படுகொலை என்றும் போராடும் எம்.பி-க்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி-க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் உள்ளிட்டோர் காஸ் விலை உயர்வு குறித்த போராட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, `நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தவிடாமல், சபையின் விதிமுறைகளை மீறி, இடையூறு விளைவித்ததற்காக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நான்கு எம்.பி-க்களையும், மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கக் கூடாது' எனக் கூறி சஸ்பெண்ட் செய்தார்.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்திரி அளித்த உறுதிமொழியை ஏற்று மக்களவை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப் பெறுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். மேலும் மக்களவையில் பதாகைகளை ஏந்தி வரக்கூடாது எனவும் அவையின் உள்ளே மீண்டும் பதாகைகள் காட்டப்பட்டால் விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார்.


Next Story