காங்கிரஸ் அரசு 'கமிஷன்' வசூலிப்பது நிரூபணம்


காங்கிரஸ் அரசு கமிஷன் வசூலிப்பது நிரூபணம்
x

வருமான வரி சோதனையில் ரூ.42 கோடி சிக்கியுள்ள நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கமிஷன் வசூலிப்பது நிரூபணமாகி இருப்பதாக குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பாவத்தின் பணம்

தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் ஒரு காண்டிராக்டர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.42 கோடி ரொக்கம் கிடைத்துள்ளது. அட்டைப் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளது. இந்த பணம் யாருடையது?. யாருடைய பிணத்தின் மீது வசூலிக்கப்பட்ட பாவத்தின் பணம்?. இந்த கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகிறது.

காண்டிராக்டர்களுக்கு ரூ.650 கோடி பணம் விடுவிக்கப்பட்டது. இந்தசூழ்நிலையில் ரூ.42 கோடி சிக்கியுள்ளது. இந்த சோதனை மூலம் இந்த அரசு கமிஷன் வசூலிப்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதன் பின்னணியில் உள்ளவா்கள் யார் என்பது தெரிய வேண்டும்.

மேலிடத்திற்கு திருவிழா

இந்த 23 பெட்டிகளில் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த பணம் தெலுங்கானா மாநிலத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காக இந்த பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக கூறியது உண்மை. இந்த ரூ.42 கோடி சிக்கியது குறித்து எந்த ரீதியான விசாரணையை முதல்-மந்திரி சித்தராமையா நடத்துவார்?.

விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் கமிஷன் வசூல் படுஜோராக நடைபெற்று வருகிறது. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு கர்நாடகம் ஏ.டி.எம். ஆக மாறியுள்ளது. காவிரி நீர் தமிழகத்திற்கு தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. மற்றொருபுறம் கன்னடர்களின் வரிப்பணம் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு செல்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால் அக்கட்சி மேலிடம் திருவிழா கொண்டாட்டத்தில் உள்ளது..

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.


Next Story