மாணவி ஆபாச வீடியோ வழக்கை காங்கிரஸ் மூடி மறைக்கிறது-மத்திய மந்திரி ஷோபா பேட்டி
மாணவி ஆபாச வீடியோ வழக்கை காங்கிரஸ் அரசு மூடி மறைக்க பார்க்கிறது என்று மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.
உடுப்பி:-
மாணவி ஆபாச வீடியோ
உடுப்பி தனியார் பாராமெடிக்கல் கல்லூரி கழிவறையில் மாணவிகள் 3 பேர் செல்போன் கேமரா வைத்து சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மல்பே போலீசார் தாமாக முன்வந்து 3 மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் குஷ்பு கல்லூரியில் விசாரணை நடத்தினார்.
சில ஆதாரங்கள் அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கல்லூரி மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கல்லூரி மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜனதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கல்லூரியை கண்டித்து மல்பேவில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் மத்திய மந்திரி ஷோபா கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மூடி மறைக்க பார்க்கின்றனர்
இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ஷோபா கூறியதாவது:-
இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு தனி உரிமை உள்ளது. ஆனால் அந்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். உடுப்பி கல்லூரியில் சக மாணவியை ஒரு சமுதாயத்தை சேர்ந்த 3 மாணவிகள் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். சக மாணவர்களுக்கு அந்த வீடியோவை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை இல்லை.
மாநில அரசு இந்த வழக்கை மூடி மறைக்க பார்க்கிறது. அரசியல் நோக்கத்தில் பா.ஜனதா இந்த விவகாரத்தை கையில் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டது ஒரு குறிபிட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவி. அவருக்கு பா.ஜனதா துணையாக நிற்கும். குற்றம் சாட்டப்பட்ட மாணவிகள் இன்னும் கல்லூரிக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை சந்திக்க கார், மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் வந்து செல்கின்றனர். அந்த கல்லூரி அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. கண்காணிப்பு கேமராவை போலீசார் கைப்பற்றி, சம்பந்தப்பட்ட வாலிபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தொடர்ந்து போராடுவோம்
மாணவிகளிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தடய அறிவியல் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். தடய அறிவியல் ஆய்வில் அனைத்து விவரங்களையும், போலீசார் மீட்டெடுக்கவேண்டும்.தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். அவருக்கு சில ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதுவரை அவர் எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை. முழு விசாரணை முடிந்த பின்னர் கூறுவதாக கூறியுள்ளனர். கட்சி சார்பாக அவர் செயல்படவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவிகள், மாணவர்கள், கல்லூரி நிர்வாகிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும். அதுவரை பா.ஜனதாவின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.