ராமநகரில் வருகிற 8-ந் தேதி முழு அடைப்பு

ராம்நகரில் வருகிற 8-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தி துணை முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிடவும் தீர்மானித்துள்ளனர்.
ராமநகர்:-
ராமநகர் மாவட்டத்தில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைக்க அரசு முடிவு செய்திருந்தது. தற்போது ராமநகரில் அமைய இருந்த மருத்துவ கல்லுரியை வேறு மாவட்டத்திற்கு மாற்ற அரசு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் ராமநகரில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து, ராமநகர் கெங்கல் அனுமந்தய்யா மருத்துவ கல்லூரி போராட்ட குழு சார்பில் டவுனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
அப்போது ஏற்கனவே ராமநகர் மாவட்டம் கனகபுராவுக்கு வரவிருந்த மருத்துவ கல்லூரி, சிக்பள்ளாப்பூருக்கு மாற்றப்பட்டு இருந்தது. முதலில் ராமநகர் டவுனில் தான் மருத்துவ கல்லூரி தொடங்க இருந்தது, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி.யால் கனகபுராவுக்கு மாற்றப்பட்டது. தற்போது கனகபுராவிலும் மருத்துவ கல்லூரி இல்லை. ராமநகருக்கு வர உள்ள மருத்துவ கல்லூரியையும் வேறு மாவட்டத்திற்கு மாற்ற நினைப்பது கண்டிக்கத்தக்கது. எனவே ராமநகரில் அமைய இருக்கும் மருத்துவ கல்லூரியை வேறு மாவட்டத்திற்கு மாற்றுவதை கண்டித்து வருகிற 8-ந் தேதி ராமநகர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். அன்றைய தினம் கனகபுராவில் உள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வீட்டையும் முற்றுகையிடுவது என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.