இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் சட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும் - வெளியுறவு அமைச்சகம்
இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் நம் நாட்டின் சட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் நம் நாட்டின் சட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று வலியுறுத்தியுள்ளது.
விவோ மொபைல் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் வேறு சில சீன நிறுவனங்களுடன் தொடர்புடைய விசாரணை குறித்து வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இங்கு செயல்படும் நிறுவனங்கள் நாட்டின் சட்டத்தை பின்பற்ற வேண்டும். நமது சட்ட அதிகாரிகள் நாட்டின் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என்று கூறினார்.
விவோ இந்தியா நிறுவனத்திற்கு தொடர்புடைய கிராண்ட் ப்ராஸ்பெக்ட் இன்டர்நேஷனல் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் (ஜிபிஐசிபிஎல்) போன்ற இன்னும் 23 நிறுவனங்கள், விவோ நிறுவனத்திற்கு பெரும் தொகையை மாற்றியுள்ளன. மொத்த விற்பனையான ரூ.1,25,185 கோடியில், ரூ.62,476 கோடியை முக்கியமாக சீனாவுக்கு அனுப்பியது அமலாக்கத் துறை இயக்குநரகம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சீன செல்போன் நிறுவனம் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த இரண்டாவது பெரிய வழக்கு இதுவாகும். முன்னதாக, சட்டத்தை மீறி சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் அனுப்பியதாக மற்றொரு சீன செல்போன் உற்பத்தியாளரான சியோமி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே, சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான 'விவோ' தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி, உத்தரப் பிரதேசம், மேகலாயா, மராட்டியம் உள்ளிட்ட 48 இடங்களில் உள்ள விவோ தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், விவோ மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 119 வங்கி கணக்குகளில் ரூ.66 கோடி நிரந்தர வைப்புத்தொகை, 2 கிலோ தங்க கட்டிகள், ரூ.73 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.