இந்திய பகுதிகளின் பெயரை சீனா மாற்றியது அர்த்தமற்ற செயல்- வெளியுறவுத்துறை
அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. அவ்வப்போது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களை மறுப்பெயரிட்டு வருகிறது. ஏற்கனவே மறுப்பெயரிட்டு 3 பட்டியல்களை வெளியிட்டது.
இதற்கிடையே நேற்று நான்காவது பட்டியலை சீனா வெளியிட்டது. அதன்படி, சீன எல்லைக்கு அருகே உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது.
சீனாவால் மறுபெயரிடப்பட்ட அருணாச்சல பிரதேசத்துக்கு சொந்தமான இடங்களின் பட்டியலில் 11 மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி ஆகியவை அடங்கும். இவற்றின் பெயர்களை சீன மொழியான மாண்டரின் மொழியிலும், அதேபோல் திபெத்திய மொழியிலும் சீனா மாற்றியுள்ளது. இதனை தனது அரசு நாளிதழிலும் சீனா வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கையை பலமுறை கண்டித்துள்ள இந்தியா, அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை நிராகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய பகுதிகளின் பெயரை சீனா மாற்றியது அர்த்தமற்ற செயல் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மறுபெயரிட்டு சீனா அர்த்தமற்ற முயற்சிகளை செய்து வருகிறது. சீனாவின் தொடர்ச்சியான முயற்சிகளை உறுதியாக நிராகரிக்கிறோம். வடகிழக்கு மாநிலம் எப்போதும் நாட்டின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும். பெயர் மாற்றம் செய்வது என்பது ஒரு இடத்தின் உரிமையை கொண்டாடுவது ஆகாது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.